×

சாலை வசதி கோரி மறியல் சாத்தூர் அருகே பரபரப்பு

சாத்தூர், நவ. 24: சாத்தூர் அருகே சாலை வசதி ேகாரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போது இச்சாலை குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் சாலையே இல்லாமல் மணல் மூடி காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது தொடர்மழையால் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் டூவீலர்களில் செல்வோர் பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து காயமுறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று சாத்தூர்- இருக்கன்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இருக்கன்குடி இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதி்ல் விரைவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Sattur ,road facility ,
× RELATED மண்ணுக்குள் புதைந்த வீடு: மதுரையில் பரபரப்பு