×

சாலையோர மரங்களிலிருந்து 10 கிலோ ஆணிகள் அகற்றம்

காரைக்குடி, நவ.24:  காரைக்குடி நகர் பகுதி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பலவகையான மரங்கள் உள்ளன. கல்லூரி சாலையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. தவிர அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா மாதிரி பள்ளி, அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி வளாகங்களில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மரங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் விளம்பரங்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. தவிர சித்த மருத்துவ சிகிச்சை, மருத்துவமனை விளம்பரங்கள் போர்டுகளை ஆணிகளை கொண்டு அடித்துள்ளதால் மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரி சாலையில் உள்ள மரங்களில் இருந்து நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில், முகமது ஆசிக், செல்வகுமார், ரஞ்சித், அஜெய் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களில் மரங்களில் அடிக்கப்பட்ட 10 கிலோ ஆணிகளை எடுத்துள்ளனர்.
 
இயக்க தலைவர் பிரகாஷ் கூறுகையில்,‘‘காரைக்குடி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்சார்ந்த விளம்பரங்களை பிளாஸ்டிக் அட்டைகள் மற்றும் காகித அட்டைகளில் தயார் செய்து 2 இஞ்ச் ஆணிகளை கொண்டு அடித்து கட்டுகின்றனர். ஆணிகள் சில காலங்களில் மரங்களுக்குள்ளேயே துருபிடித்து விடுவதால் மரங்கள் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எங்களது இயக்கம் சார்பில் மரங்களை காக்க கடந்த 5 ஆண்டுகளாக மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக கல்லூரி சாலையில் உள்ள மரங்களில் மட்டும் 10 கிலோவுக்கு மேல் ஆணிகள் அகற்றி உள்ளோம். இதுபோன்று விளம்பர தட்டிகளை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...