×

சபரிமலை சீசன்,மூகூர்த்தங்களால் காய்கறி விலை கிடு கிடு உயர்வு சின்ன வெங்காயம் கிலோ ரூ.120

சிவகங்கை, நவ.24:  சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மாவட்டத்தில் திருப்புவனம், சிங்கம்புணரி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை  உட்பட மிகக்குறைவான இடங்களில் மட்டுமே காய்கறிகள் பயிரிடப்படுகிறது. கீரை வகைகள், கத்திரி, கொத்தவரங்காய், வெண்டை, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவைகளே அதிகபட்சமாக இங்கு விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் வரை போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்தது. ஆனாலும் காய்கறி விலை அவ்வப்போது அதிகரித்தது. இந்நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் மற்றும் திருமண மூகூர்த்தங்களால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உள்ளூரில் விலையும் காய்கறிகள் மற்றும் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளும் கூடுதல் விலையாக உள்ளன. கத்தரிக்காய் கிலோ ரூ.80, தக்காளி கிலோ ரூ.50ஐ தாண்டியுள்ளது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.80, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120, அவரை கிலோ ரூ.80, வெண்டைக்காய் கிலோ ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80 பாவைக்காய் கிலோ ரூ.80, சேனைக்கிழங்கு கிலோ ரூ.80, கருணைக்கிழங்கு கிலோ ரூ.60, முட்டைக்கோஸ் கிலோ ரூ.60 என கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளன.

பொதுமக்கள் கூறியதாவது, ‘அனைத்து குழம்புகள், சட்னி உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தும் வெங்காயம் விலை அதிகப்படியாக உள்ளது. பல மாதங்களாக உயர்ந்த நிலையில் உள்ள வெங்காயத்தின் விலை குறையவே இல்லை. இதனால் மிகக்குறைவான அளவே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சந்தைகளிலேயே விலை உயர்ந்த நிலையில் கடைகளில் விலை இன்னும் கூடுதலாக உள்ளது. காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீட்டு பட்ஜெட் அதிகரித்துள்ளது என்றனர்.

Tags : season ,Sabarimala ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு