×

கடலாடி,முதுகுளத்தூர் பகுதியில் மழையால் தீவிரமடையும் விவசாய பணிகள் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவிப்பு

சாயல்குடி, நவ.24:  முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமடைந்துள்ளது. உரம் கிடைக்காததால் உரமிட முடியாமல் அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் இந்தாண்டு கடந்த செப்டம்பர் மாதம் பெய்த சிறு மழைக்கு விவசாயிகள் உழவார பணிகளை மேற்கொண்டனர். வயற்காடுகளில் நெல் விதைகளை விதைத்தனர். ஆனால் தொடர் மழையின்றி சில இடங்களில் பயிர் முளையிட்ட தருவாயில் கருகியது, பெரும்பாலான இடங்களில் விதைகள் முளைக்கவில்லை. மயில் போன்ற பறவைகள் விதைகளை கொத்தி தின்று சென்றது.

இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கிராம பகுதி வயற்காடுகள் மற்றும் கண்மாய், ஊரணி, பண்ணைகுட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் இரண்டாம் முறையாக வயற்காடுகளில் மீண்டும் உழவார பணிகளை செய்து வருகின்றனர். மறுபடியும் உழுது நெல் விதைத்தல், விலைக்கு நெல் மற்றும் மிளகாய் நாற்றுகளை வாங்கி கூலியாட்கள் மூலமாக நடவு பணிகளை செய்து வருகின்றனர். சில இடங்களில் பயிர்களுக்கு இடையே களை எடுத்தல் நடந்து வருகிறது. களை எடுக்க கூலியாட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் யூரியா உரம் மூட்டைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடாக இருப்பதால், பயிர்களுக்கு உரம் இடமுடியவில்லை. இதனால் பயிர்கள் வலுவிழந்து சேதமடையும் நிலை காணப்படுகிறது என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். விவசாயிகள் கூறும்போது, ‘‘இந்தாண்டு பருவமழையை எதிர்பார்த்து முதலில் விதைத்த நெல் பயிராகி வரும் தருவாயில் தண்ணீரின்றி கருகி போனது. பெரும்பாலான இடங்களில் பயிர்கள் முளையிடவில்லை. இந்நிலையில் பருவமழை காலம் கடந்து மீண்டும் நல்ல மழை பெய்து வருகிறது. வயற்காடுகளில் தண்ணீர் தேங்கியதால், நெல் நாற்று முடி ஒன்று ரூ.10க்கும் மிளகாய் நாற்று ரூ.20 முதல் கொடுத்து வெளியில் வாங்கி வந்து, கூலியாட்கள் மூலம் நாற்றுகளை நட்டு வருகிறோம். நடுவதற்கும், களை எடுப்பதற்கும் கூலியாக பெண்களுக்கு ரூ.250ம், ஆண்களுக்கு ரூ.350 கொடுக்கப்படுகிறது.

பலர் நூறுநாள் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு செல்வதால் களை எடுக்க முடியவில்லை. இந்நிலையில் பயிர்களுக்கு அடி உரம், யூரியா, டிரை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் கிராம பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கிடைக்கவில்லை. கடந்த ஒரு சில நாட்களாக கடந்த ஆண்டு விற்பனைக்காக வந்த பழைய உரம் முட்டைகள் தான் கிடைத்தது. தற்போது அதுவும் கிடைக்கவில்லை. கடைகளிலும் கூடுதல் விலையாக இருந்தும் கடும் தட்டுபாடாக உள்ளது. இதனால் பயிர்களுக்கு உரம் இட முடியவில்லை. எனவே அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களில் தடையின்றி உரம் விற்கவும், விவசாய காலம் முடியும் வரை பஞ்சாயத்துகளில் நூறு நாள் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது அந்த பணியாளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : areas ,Mudukulathur ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...