×

சேலைகள் தேக்கத்தால் வேலையின்றி தவிக்கும் நெசவாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பரமக்குடி, நவ.24:  பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியிலுள்ள நெசவாளர்களுக்கு அல்லுக்கூடம் இல்லாததால் தெருக்களில் அல்லு நீட்டும் அவலம் நீடிக்கிறது. இந்த ஆண்டிற்கான உற்பத்தி திட்டம் இல்லாமல் வேலையின்றி நெசவாளர்கள் தவித்து வருகின்றனர். பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 86 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கச்சாப் பொருட்களை பெற்று தொழில் செய்கின்றனர். கைத்தறி துணி விற்பனைக்காக துவக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வருடம் தோறும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட காலங்களில் உற்பத்தி திட்டம் கொடுத்து அதனை கொள்முதல் செய்யும்.

ஆனால் இந்த வருடம், உற்பத்தி திட்டம் கொரோனா காரணமாக பெயரளவில் மூன்று மாதங்களுக்கான உற்பத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு அதனை உற்பத்தி திட்டமாக அறிவித்துள்ளதாக நெசவாளர் சங்கங்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். காட்டன் மெசரஸ் பட்டு உள்ளிட்ட சேலை ரகங்கள் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் 1 கோடி மதிப்பில் தேங்கி கிடக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து நெசவாளர்களுக்கு தொழில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், தேங்கிய ஜவுளியை விற்பனை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது.

அதைபோல், பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள நெசவாளர்கள் தெருக்களில் நெரிசலுக்கு அல்லு நீட்ட முடியாமல் பரிதாபமான நிலையில் உள்ளனர். சேலைகள் நெசவு செய்வதற்கு முன் அவற்றை சிக்கலின்றி சீர் செய்யும் வகையில், தெருக்களில் அல்லு நீட்டுவதற்கு 50 முதல் 60 மீட்டர் நீளம் வரை இடம் தேவைப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், அல்லு நீட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அல்லு கூடத்திற்கு இடம் ஒதுக்கப்படும் என்றும், மழை வெயில் நேரங்களிலும் சீரமைப்பு இன்றி தொழில் நடத்துவதற்கு ஏதுவாக மேற்கூரை அமைக்கப்படும் என்றும் கூறினாலும் இதுவரையில் அமைக்க வில்லை. இதனால், நெசவாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. வரும் நாட்களில் இங்குள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அல்லுக்கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிய மஸ்தூர் நெசவாளர்கள் சங்க மாவட்ட தலைவர் காசி விஸ்வநாதன், ‘‘கொரோனா காலக்கட்டத்தில் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடன் சுமையால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வரும் சூழல் தற்போது உள்ளது. இந்தாண்டுகான உற்பத்தி திட்டத்தை அறிவிக்காமல், கோ-ஆப்டெக்ஸ் ரகங்களை மூன்று மாதத்திற்கான திட்டத்தை உற்பத்தி திட்டமாக அறிவிப்பது நெசவாளர்களை ஏமாற்றும் வேலையாகும். கோ-ஆப்டெக்ஸ் ரகங்கள் ரூ.1 கோடி தேக்கத்தை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இக்கட்டான சூழலில் அரசு உடனடியாக தலையிட்டு சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...