வாக்காளர் சேர்ப்பு முகாமில் 48,879 மனுக்கள்

மதுரை, நவ. 24: தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 26 லட்சத்து 7ஆயிரத்து 693 ஆகும். இதனைத்தொடர்ந்து வரும் ஜன.1ம் தேதி 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளராக சேரலாம். இதற்காக கடந்த 16ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை மனுக்கள் பெறப்படுகிறது. வாக்காளர் சேர்ப்புக்காக முதற்கட்ட சிறப்பு முகாம் கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில், 2,716 வாக்குச்சாவடியில் நடந்தது. இதில் அரசியல்கட்சியினர் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் மூலம் இளம் வாக்காளர்களை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களை அழைத்து வந்து வாக்காளராக சேர தேவையான உதவிகள் செய்தனர். இதனால் முதற்கட்ட முகாமில் அதிகளவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.

 முதற்கட்ட சிறப்பு முகாமில், புதிய வாக்காளராக சேர படிவம்-6ஐ 39,034 பேரும், பெயர் நீக்கக்கோரி படிவம்-7ஐ 3,784 பேரும், வாக்காளர் பட்டியலில் பெயர் முகவரி திருத்தம் கோரி படிவம்-8ஐ 3,501 பேரும், ஒரு தொகுதிக்குக்குள் முகவரியை மாற்றக்கோரி படிவம் 8ஏவை 2,560 பேர் என மொத்தம் 48 ஆயிரத்து 879 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, பின்பு  வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோன்று நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெறும். அடுத்தகட்ட சிறப்பு முகாம், டிச.12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Related Stories: