×

வாக்காளர் சிறப்பு முகாம் 9,115 பேர் விண்ணப்பம்

ஊட்டி, நவ. 24:நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 9,115 பேர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக நீலகிரியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பெயர் சேர்ப்பிற்கு விண்ணப்பம் அளித்தனர்.

இதுதவிர பலர் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல், முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் அளித்தனர். கடந்த சனிக்கிழமையன்று நடந்த சிறப்பு முகாமில் 3 தொகுதிகளிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,765 பேர் படிவம் 6ல் விண்ணப்பித்தனர். பெயர் நீக்கத்திற்கு படிவம் 7ல் 210 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8ல் 323 பேரும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ.,வில் 133 பேர் என மொத்தம் 3,431 பேர் விண்ணப்பித்தனர். மேலும் ஞாயிற்றுகிழமை நடந்த முகாமில் பெயர் சேர்க்க 4,435 பேரும், நீக்கத்திற்கு 260 பேரும், திருத்தம் செய்ய 583 பேரும், முகவரி மாற்றத்திற்கு 406 பேர் என மொத்தம் 5,684 பேர் விண்ணப்பித்தனர். 2 நாட்களில் மொத்தம் 9,115 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 7200 பேர் பெயர் சேர்ப்பிற்கு மட்டும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 12,13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

Tags : Voter Special Camp ,
× RELATED புதுவையில் புதிதாக 31 பேருக்கு தொற்று