×

கனமழை எச்சரிக்கை விவசாயிகள் ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

ஊட்டி,  நவ. 24: தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை  குறைக்கலாம். மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.  வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து  மழைநீர் தேங்குவதை தவிர்க்கலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து  செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம்.

மரங்களை சுற்றி மண்ணை கொட்டி அணைத்து  பாதுகாப்பு கொடுக்கலாம். மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல்  உரமிட்டு மண் அணைக்க வேண்டும். மேலும், இலைவழி உரம் கொடுத்து  பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம். பசுமைக்குடிலை  பொறுத்தவரை, பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக்  கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  பசுமைக்குடிலின் உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி  செய்து கொள்ள வேண்டும்.

பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள்  பத்திரமாக மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அருகிலுள்ள மரங்கள்  நல்ல நிலையில் உள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். பட்டுப்போன,  காய்ந்துபோன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலினை பாதிக்காத வண்ணம்  பார்த்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடிலின் பகுதிகளை சுத்தமாக வைத்துக்  கொள்ள வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்திலுள்ள கிளிப்புகளை மாற்ற  வேண்டும்.  
நிழல் வலைக்குடிலை பொறுத்தவரை கிழிந்து போன  நிழல் வலைகளை சாிசெய்தல் வேண்டும். நிழல்வலைக் குடிலின் அடிப்பாகம்  பல்லாண்டுப் பயிர்களான நல்லமிளகில், பூஞ்சாண நோய்களைத் தடுக்க சூடோமோனாஸ்  தெளிக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்துடிரைகோடர்மா விரிடி மற்றும்  சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லிகளை நிலத்தில் தெளிக்க வேண்டும். உரிய  வடிகால் வசதி செய்திட வேண்டும். நல்லமிளகு கொடிகளை சாியாக கட்டிவிட  வேண்டும். தாங்குச் செடிகளில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து  செய்ய வேண்டும். கிராம்பு, ஜாதிக்காய் பயரில் பூஞ்சாண நோய்களைத் தடுக்க  சுடோமோனாஸ் தெளிக்க வேண்டும். ஆண்டு பயிர்களான வாழையில், காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட  இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். 75க்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். காய்கறிகள், பந்தல் காய்கறிகள் மற்றும்  மலர் பயிர்களை பொறுத்தவரை, உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். டிரைக்கோடர்மா விரிய பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். மரவள்ளி பயிரின்  அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைத்தல்  வேண்டும். எனவே, விவசாயிகள் மேற்காணும் ஆயத்த நிலை ஏற்பாடுகளை  கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம்  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Heavy Rain Warning Farmers ,
× RELATED பாலமேட்டில் நாளை நடைபெற உள்ள...