கோரிக்கைகளை வலியுறுத்தி ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஆனைமலை, நவ. 24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆனைமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில், 17 கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாக அனுபவ நில உரிமை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர கோரி, ஆனைமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாசலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு அனுபவம் நில உரிமை பட்டா வழங்கப்படும், ஜாதி சான்றிதழ். பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும்.புளியங்கன்டி, சேத்துமடை அண்ணாநகர், பகுதிகளில் புதிய வீடுகள் கட்ட பணி ஆணை விரைவில் வழங்கப்படும், என உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: