×

வாரவிடுமுறையில் பாரபட்சம் ஆயுதப்படை போலீசார் ஏமாற்றம்

ஈரோடு,நவ.24:தமிழகத்தில் எஸ்.ஐ., பதவிக்கு கீழ் உள்ள அனைத்து போலீசாருக்கும், வாரம் ஒரு  நாள் சுழற்சி முறையில் விடுமுறை வழங்க தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ்  உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு  வந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில்  பணியாற்றும் போலீசாருக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும், ஆயுத  படை போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே ஆயுதப்படை போலீசாருக்கும் வாரவிடுப்பு வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து ஆயுதப்படை போலீசார் கூறியதாவது: ஈரோடு  மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 1,149 போலீசாருக்கு  வாரவிடுமுறை உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு வாரவிடுமுறை உத்தரவு  பொருந்தாது என்று கூறுவது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் ஒழுங்கு  பிரச்னை ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு, கருவூலகம், கலெக்டர் அலுவலகம்  உள்பட அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு, கைதிகளை சிறைகளுக்கு அழைத்து  செல்வது, கோர்ட்டிற்கு அழைத்து வருவது, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு,  போக்குவரத்து சரிசெய்வது, வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் எங்களை  ஈடுபடுத்துகின்றனர். ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாரை விட எங்களுக்கு  தான் பணிப்பளு அதிகம். ஆனால் எங்களுக்கு வாரவிடுமுறை கிடையாது என்கின்றனர்.  ஸ்டேஷன் போலீசார் போல எங்களுக்கும் சுழற்சி முறையில் வாரவிடுமுறை வழங்க  வேண்டும். எஸ்.ஐ. ரேங்கிற்கு கீழ் உள்ள போலீசாருக்கு தான் வாரவிடுமுறை  உத்தரவு பொருந்தும் என்று அறிவித்துள்ள நிலையில், ஆயுதப்படை போலீசாருக்கு  மட்டும் பொருந்தாது என கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED பெண் போலீஸ் விட்டுச்சென்றதுப்பாக்கி தோட்டாக்கள்