வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு ஆகஸ்ட் மாத சிறப்பு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பு

வேலூர், நவ. 24: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய சிறப்பு ஊதியம் இதுவரையிலும் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊர்க்காவல் படை வீரர்கள் 430க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினர் செய்யும் பல்வேறு பணிகளுக்கு துணையாக இவர்களும் களத்தில் நின்று இரவு, பகலாக பணி மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் 2ம் நிலை காவலர் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை ஊர்க்காவல் படையினர் செய்வதோடு, காவல்துறையின் சுமையையும் குறைக்கின்றனர்.

கொரோனா பரவலையொட்டி கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணிகளை விரைவுபடுத்தினர். ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, தேவையின்றி வாகனங்களில் வருவோர் கண்டறியப்பட்டனர். இதில் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டனர்.

ஊர்க்காவல் படையினரை பொறுத்தவரை மாதத்திற்கு 5 டூட்டி மட்டுமே அளிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் 5 டூட்டிகளை அளித்திட கேட்டுக் கொண்டது. ஆனால், அவ்வாறு வழங்கவில்லை. அதையும் தாண்டி டூட்டி வழங்கப்பட்டது. தற்போதும் வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் 10 டூட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சிறப்பு ஊதியமாக ஒரு நாளைக்கு ₹56ம், மாதம் ₹12,880 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் மட்டும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணியாற்றிய ஊர்க்காவல்படை வீரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய சிறப்பு ஊதியத்திற்கு பதிலாக ₹2,880 மட்டுமே சாதாரண ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து வேலை செய்தும் சிறப்பு ஊதியம் இதுவரையிலும் வழங்காமல் அதிகாரிகள் பிடித்தம் செய்துள்ளனர்.

Related Stories:

>