×

வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை, நவ.23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. அதில், வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 3ம் நாளான நேற்று சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 11 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் கோயில் 5ம் பிரகாரத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு 7 மணியளவில் நடந்த உற்சவத்தில் தனித்தனி வெள்ளி விமானங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர். சுவாமி பவனி வந்த 5ம் பிரகாரத்தில், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. கோயில் ஊழியர்கள், திருப்பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மாடவீதியில் சுவாமி திருவீதியுலா நடைபெறாததால், பஞ்சமூர்த்திகள் பவனியை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், 3ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் 2ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இ-டிக்கெட் இல்லாத 3 ஆயிரம் பக்தர்கள் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டதால், ராஜகோபுரம் நுழைவு வாயிலை கடந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Panchamoorthy Bhavani Annamalaiyar Temple ,Sankabhishekam Karthika Fire Festival ,celebration ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்