×

(தி.மலை) கிரிவலப்பாதையில் கலெக்டர் திடீர் ஆய்வு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி? திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி

திருவண்ணாமலை, நவ.23: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, கிரிவலப்பாதையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திடீர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, வரும் 29ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபத்தன்றும், பவுர்ணமி தினத்தன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீபம் ஏற்றும் மலைமீது செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அதையொட்டி, கிரிவலப்பாதையின் பெரும்பாலான தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

அவருடன், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மட்டும் சென்றார். பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, பெரிய தெரு பகுதியில் உதவியாளர்கள், அதிகாரிகள் யாரும் இல்லாமல், கலெக்டர் தனியாக நடந்து சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். மகா தீபத்தன்றும், பவுர்ணமி நாளிலும் கிரிவலப்பாதையில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது என்பது குறித்தும், வாகன போக்குவரத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்த இருக்கிறார். கிரிவலப்பாதையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்த நிலையில், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மகா தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்களா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : T.Malai ,Collector ,inspection ,devotees ,Kiriwala ,occasion ,Thiruvannamalai Fire Festival ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...