×

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து

தஞ்சை, நவ. 23: புயல் எச்சரிக்கை தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் பயிர்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் 24, 25ம் தேதிகளில் பலத்தக் காற்றுடன் மிக அதிகஅளவு மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி, வயலில் தேங்கியுள்ள நீரை வடித்து விட வேண்டும். இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிக நீர் வடிந்திடும் வகையில் கிடங்கு வெட்டி வைக்க வேண்டும்.

தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மரங்களில் உள்ள முதிர்ந்த காய்களைப் பறித்து விட வேண்டும். மரத்தில் அதிக அளவு இளநீர் குலைகள் இருந்தால், இளநீர் குலைகளையும் பறித்து, மரத்தை அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரங்களில் உள்ள காய்ந்த மட்டைகள் மற்றும் பாலையை அகற்றி விட வேண்டும். அதிக அளவில் உள்ள பச்சை மட்டைகளையும் கழித்து விட வேண்டும். பழ மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் இதர மரங்களில் அதிக அளவில் உள்ள கிளைகளை வெட்டி காற்று எளிதில் புகும் வண்ணம் கழித்து விட வேண்டும். விவசாயிகள் இரு நாள்களில் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ