தஞ்சையில் காப்பீடு நகல் வழங்க விவசாயிகளிடம் தலா ரூ.50 பாஜகவினர் நூதன வசூல்

தஞ்சை,நவ.23: முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட நகலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து லேமினேட் செய்து கொடுத்து, ஏழை விவசாயகளிடமிருந்து தலா ரூ. 50 வீதம் பாஜகவினர் நூதன முறையில் வசூல் செய்தனர். முதல்வரின் காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.இந்த காப்பீடு திட்ட நகலை பெறுவதற்கு, தமிழக அரசு இணையதளத்தில், ரேசன் கார்டு அட்டை எண் வழங்கி, அனைவரும் சுலபமாக பெற்று கொள்ளும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை ஒன்றியம்,வயலுார் கிராமத்தில், நேற்று 10க்கும் மேற்பட்ட பாஜகவினர், அனைத்து மக்களுக்கும் முதல்வரின் காப்பீடு திட்டம் மற்றும் மத்திய அரசின் காப்பீடு திட்டம் மூலம் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்ட நகல் வழங்குவதாக தெரிவித்தனர்.இதனையடுத்து சுமார் 10 கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள், விவசாயிகள், கூலி விவசாயிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர்,‘பின்னர், அங்கிருந்த பாஜகவினர், அனைவரிடமும் தலா ரூ. 50 பெற்று கொண்டு, முதல்வர் மற்றும் மத்திய அரசின் காப்பீட்டு திட்ட நகலை, லேமினேட் செய்து கொடுத்தனர்.இதனால் நேற்று லட்சக்கணக்கான ரூபாயை நூதன முறையில் பாஜகவினர் வசூலித்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள பாஜகவினர் கேட்ட போது, நாங்கள் நகல் மற்றும் லேமினேட் செய்து, கொடுப்பதற்காக தலா ரூ. 50 பெற்று கொள்கிறோம் என்றனர். இது குறித்து தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன் கூறுகையில், மத்திய, மாநில அரசின் காப்பீடு திட்டம் நகல் எடுப்பதற்கு பணம் வசூலிக்ககூடாது என்றார். இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன் கூறுகையில், காப்பீடு திட்டம் நகல் மற்றும் லேமினேட் செய்து கொடுத்து, தலா ரூ. 50 வசூல் செய்யக்கூடாது. காப்பீடு திட்டம் தொடர்பாக இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் கூறி உடனடியாக விசாரிக்க கூறுகிறேன் என்றார்.

இது குறித்து அக்கிராம விவசாயி கூறுகையில்,மத்திய மாநில அரசுகள், ஏழை மக்கள், சுலபமான முறையில் அனைத்து விதமான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக காப்பீடு திட்டம் உருவாக்கினர். மத்திய அரசின் காப்பீட்டு நகலில் மோடி படத்துடன், தாமரை சின்னமும், தடை செய்யப்பட்ட வெற்றி வேல்யாத்திரையின் முத்திரையுடன், காப்பீடு குழு, உதவும் தாமரை கரங்கள் என்று அச்சிட்டு வழங்குகிறார்கள்.நேற்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ. 50 வசூல் செய்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக காப்பீடு நகலை வழங்க ரூ. 50 பெற்றது குறித்து விளக்கம் தர வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: