ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி, நவ. 23: தூத்துக்குடியில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு நடத்திய கலெக்டர் செந்தில்ராஜ், ஆன்லைன் மூலமாகவும் பெயர் சேர்க்கலாம் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூத் வாரியாக வாக்காளர்  பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. டிசம்பர் 15ம் தேதி வரை  வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்காக 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாநகரில் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த  சிறப்பு முகாமை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கைலாசகுமாரசாமி, துணை தாசில்தார் (தேர்தல்) செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர்செந்தில்ராஜ்  கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் சிறப்பு முகாம்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று முறையாக நிரப்பி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. அதை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டுமானால் நாம் வாக்காளராக கண்டிப்பாக இணைந்து கொள்ள வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதையும் இப்போதே மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் பிரச்னை இல்லாமல் வாக்களிக்க முடியும்.18 வயது பூர்த்தி அடைபவர்கள் அனைவரும் வாக்காளராக இணைந்து கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்’’ என்றார். ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது. பேட்மாநகரம், பேரூர், ஆழ்வார்தோப்பு பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்கான சிறப்பு முகாமை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜீவரேகா மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வுநடத்தினர்.

இதே போல் ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் இம்முகாம் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் திரளானோர் பயனடைந்தனர். ஏரல்: ஏரல் தாலுகா பகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தூத்துக்குடி ஜீவரேகா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், தேர்தல் துணை தாசில்தார் தங்கையா, ஆர்ஐ ராமலட்சுமி, வாழவல்லான் விஏஓ கார்த்திக், கிராம உதவியாளர் திரவியம் உள்ளிட்ட பலர் பங்கேற்னர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதிய வாக்காளர்களின்  பெயர்களைச் சேர்ப்பதற்கான சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட சிறப்பு திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடியில் நடந்தது. கோவில்பட்டி லட்சுமிபுரம் மேல காலனியில் வாக்காளர் முகாமில் நடந்த சிறப்பு முகாமை கோவில்பட்டி ஒன்றியத் தலைவர்  கஸ்தூரி சுப்புராஜ் பார்வையிட்டார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் விமலாதேவி சவுந்தரராஜன், மணியாச்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் ரேவதி பங்கேற்றனர்.

செய்துங்கநல்லூர்: கருங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம்  உள்ளிட்ட பணிகளை அதிமுக கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், யூனியன் துணை சேர்மனுமான லட்சுமணப்பெருமாள் பார்வையிட்டார்.

Related Stories: