×

ஆப்பனூர் விவசாய நிலங்களில் ஆபத்தான மின் வயர்கள்,கம்பங்கள் புகார் அளித்தும் பயனில்லை

சாயல்குடி, நவ.23: கடலாடி அருகே ஆப்பனூர், அரியநாதபுரம், தெற்குகொட்டகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 60 வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இங்குள்ள ஆப்பநாதர் நகர், ஆப்பனூர் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட தெரு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து, சாயும் நிலையில் உள்ளது. மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இதனால் பெண்கள் தலையில் தண்ணீர் குடம் வைத்து சென்றாலும் கூட தட்டுகிறது. கோயில் திருவிழாகளின் போது பால்குடம் எடுத்து செல்லும்போதும் இடையூறாக இருக்கிறது. இறந்தவரின் உடலை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது என கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு மழை காலத்தில் நெல், மிளகாய், சிறுதானியங்கள் போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது, கிராமங்களில் பயன்பாட்டிற்காக விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டது. வருடங்கள் பல ஆகி விட்டதால் மின்கம்பிகள் தொட்டுவிடும் தூரத்தில் தாழ்வாக தொங்குகிறது. பெரும்பாலான வயற்காட்டில் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் களை எடுத்தல், அறுவடை செய்வது வரை பணிகள் இருப்பதால் இன்னும் 5 மாதங்களுக்கு பெரும்பாலும் விவசாய நிலங்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கனமழை அல்லது பலத்த காற்று அடித்தால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து விடும். மின்கம்பிகளும் அறுந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கடலாடி மின்வாரியத்தில் பலமுறை புகார் மனு அளித்து கண்டுகொள்ளவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பாக தாழ்வாக செல்லும் மின்வயர்கள், சாயும் நிலையிலுள்ள மின்கம்பங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...