×

பாரம்பரிய மீனவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடல்சார் மக்கள் சங்கம் கோரிக்கை

ராமேஸ்வரம், நவ.23: பாரம்பரிய மீனவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடல்சார் மக்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் நேற்று கடல்சார் மக்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. உத்திரபிரதேச பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மீன்வளத்துறை நிலைக்குழு உறுப்பினர் பிரவீன்குமார் நிஷாத் தலைமை வகித்தார். தேசிய கப்பல் துறை வாரியம் உறுப்பினர் கேப்டன் சஞ்சய் பிரஷார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிஷாத், தேசிய மீனவர் சங்க பொருளாளர் டாக்டர் மகேந்திரா குமார் தோமர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அரசால் விவசாயத்திற்கு வழங்கப்படும் சலுகை போல் கடல் விவசாயமான மீன்பிடித் தொழிலுக்கும் சலுகைகள் வழங்கி மேம்படுத்திட வேண்டும். அனைத்து வகையான மீன்பிடி கலன்களையும் பதிவு செய்ய வேண்டும். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து நூறு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடற்படை, கப்பல் துறைமுகம், மீன்வளத்துறை, மீன்வள பல்கலைக்கழகம், கடலோர காவல்படை போன்றவற்றில் பாரம்பரிய மீனவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அடையாளமாக்கி அரசானை வழங்கிட வேண்டும். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி சட்டமன்றம், பாராளுமன்றத்தில் கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான தனி அரசியல் பிரதிநிதித்துவம், தனி தொகுதி வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags : Maritime People's Association ,fishermen ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...