உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர், நவ 23: தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருப்பூர் குமரன் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 21ம் தேதி முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதை தொடர்ந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இதனைகண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன்ரோட்டில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜன், வடக்கு தொகுதி பொருப்பாளர் தினேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். அவர்களை வடக்கு போலீசார் கைது செய்து காமாட்சி அம்மன் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் குமரன் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசி: அவிநாசி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில், அவிநாசியில் புதிய பஸ் நிலையம் அருகில் அவிநாசி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சிவபிரகாஷ், நகர செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 52பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: