×

பா.ஜ. வேல் யாத்திரைக்கு போலீஸ் தடை; மறியல்

கோவை, நவ. 23: கோவை சிவானந்தாகாலனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது: வேல் யாத்திரை திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்கும். வரும் டிசம்பர் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும். கொரோனா நோய் பரவல் கால கட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியினர் மூலமாக 1 கோடி பேருக்கு உணவு பொட்டலம் தர முடிந்தது.
நோய் பரவல் நேரத்தில் தூய்மை பணியாளர்கள், டாக்டர், நர்சு, சுகாதார துறையினர் சிறப்பாக பணியாற்றினார்கள். இவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மக்களுக்கான திட்டங்களை ெகாண்டு போய் சேர்த்திருக்கிறது. தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு தலா 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அவர்களது வங்கிக்கணக்கில் போட்டிருக்கிறோம். தக்காளி சில சமயத்தில் கிலோ 1 ரூபாய் விற்பனையாகும் நிலையிருக்கிறது. புதிய வேளாண் சட்டத்தில் கிலோ 30 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டால், விலை குறைந்தாலும் அந்த விலைக்கு நிறுவனம் வாங்கவேண்டும் என்ற அளவில் விவசாயிகளின் கோரிக்கையை பிரதமர் செயல்படுத்தியுள்ளார். சிறு, குறு தொழில் சங்கத்தினர் குறைகளை கேட்டோம். இதைகேட்ட மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கியது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அதிகளவு பயன்பெற்றது. மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செய்திருக்கிறோம். தமிழகத்தில் 2013-2014 ஆண்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 4 லட்சம் பேர் மத்திய அரசு திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். வேல் யாத்திரை 9வது நாளாக நடக்கிறது. இது தொடர்ந்து முன்னேறும். தைப்பூச நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு முருகன் பேசினார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், வேல் யாத்திரையை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து துவங்க சென்றனர்.

ஆனால் போலீசார் யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. மாநில தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் சிலர் 5 வாகனங்களில் கோயிலுக்கு சாமி கும்பிட செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களை அனுமதிக்கவில்லை. யாத்திரை நடத்தக்கூடாது, ஊர்வலம் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மருதமலை அடிவாரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு, போலீசாருக்கும், பா.ஜ. கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அடிவாரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, பா.ஜ. நிர்வாகிகள் வேல் யாத்திரையை கைவிட்டு, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

இதேபோல் சிவானந்தா காலனியில் பாஜ., சார்பில் நடந்த வேல் யாத்திரையில் சுமார் 6000 பேர் கலந்து கொண்டனர். இதில் 650 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன், தமிழக பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ் செல்வக்குமார், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், வடக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்பட கலந்து கொண்டனர்.

Tags : BJP Police ,pilgrimage ,Vail ,
× RELATED ஐநா முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு அமலுக்கு வந்தது அணு ஆயுத தடை