×

காந்திபுரம், சிங்காநல்லூரில் மல்டி லெவல் பார்க்கிங்

கோவை, நவ.23: கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் மல்டி லெவல் பார்க்கிங், வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை நகரில் மக்கள் தொகை, வாகன பெருக்கம் அதிகமாகி வருகிறது. ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் 11,676 சதுரடி பரப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் பணி தாமதமாகி வருகிறது. 1990 இரு சக்கர வாகனங்கள், 979 கார் நிறுத்தும் வகையிலான இந்த பார்க்கிங் திட்ட பணிகள், 2 ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது. தற்போது காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மேற்பார்வையில் கோவை  மாநகராட்சி நிர்வாகம் மூலமாக பணிகள் துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சியின் 3 ஏக்கர் நிலம், போக்குவரத்து கழகத்தின் 1.5 ஏக்கர் நிலம், வீட்டு வசதி வாரியத்தின் 2.16 ஏக்கர் நிலம் என 6.66 ஏக்கரில், 26,952 சதுர மீட்டர் பரப்பில் பிரமாண்டமாக பார்க்கிங் மற்றும் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் 1.3 ஏக்கரில் 5,261 சதுர மீட்டர் பரப்பில் இதேபோல் பார்க்கிங், வணிக வளாகம் அமைக்கப்படும். மொத்தமாக இரு இடங்களில் 7.96 ஏக்கரில் 32,213 சதுர மீட்டர் மல்டி லெவர் பார்க்கிங், வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தி, டெண்டர் விட்டு பணிகள் துவக்க தேவையான ஆயத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும்போது காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் போன்றவை உள்ளூர் டவுன் பஸ்களின் இயக்கத்திற்கான டெர்மினல் பகுதியாக மாறி விடும். தற்போதுள்ள அளவில் இட வசதிகள் தேவைப்படாது. அதாவது பஸ் ஸ்டாண்ட் அந்தஸ்தில் இந்த பகுதிகள் இருக்காது. மேலும் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதால் நகரில் பஸ் ஸ்டாண்ட் திட்டம் பெயரளவிற்குதான் இருக்கும். நகரில் வாகன பெருக்கம் அதிகமாகி வரும் நிலையில் பார்க்கிங்தான் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எனவே பஸ் ஸ்டாண்ட் பகுதியை மல்டி லெவல் பார்க்கிங் வளாகமாக மாற்றி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டாக டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டமும் செயல்பாட்டிற்கு வராமல் இழுபறியில் இருக்கிறது. வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும்போது கோவை நகரின் உள் பகுதி கட்டமைப்பு வெகுவாக மாறி விடும். போக்குவரத்து நெரிசல் இல்லாத பார்க்கிங், ரோடு, வணிக வளாகங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மூலமாக மல்டி ெலவல் பார்க்கிங், வணிக வளாகங்களுக்கு சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : Gandhipuram ,Singanallur ,
× RELATED சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட்...