மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,268 சாலை விபத்து; 101 பேர் பலி

ஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு நடந்த 1,268 சாலை விபத்துகளில் 101 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஈரோடு எஸ்பி. தங்கதுரை கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் 614 பேரும், 2018ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் 339 பேரும் பலியாகி உள்ளனர். கடந்த 2019 ஆண்டு 1,808 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 153 பேர் பலியாகி உள்ளனர். 1,655 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர் விபத்து நடக்கும் பகுதிகளில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பேரில் மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்துக்கள் பாதியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா முழு ஊரடங்கு காரணமாகவும், சாலை பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டதன் காரணமாகவும் ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் 1,268 சாலை விபத்துக்களே நடந்துள்ளது. இதில், 101 பேர் பலியாகி உள்ளனர். 1,167 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் விபத்துகளை அதிகம் நடக்கும் பகுதிகளிலும்,

புதிதாக விபத்துக்கள் நடந்த பகுதிகளும் கண்டறிந்து அங்கு ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை சமிக்ஞைகள், அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கைகள், இரு வழிப்பாதை சாலைகளில் போதுமான அளவு சென்டர் மீடியன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய சாலைகளிலும், தொலை தூரம் செல்லும் சாலைகளிலும் 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: