×

ஈரோட்டில் ரிங் ரோடு அமைக்க நிலம் வழங்கிய ஆளுங்கட்சியினருக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கல்

ஈரோடு, நவ.23: ஈரோட்டில் ரிங் ரோடு அமைக்க நிலம் வழங்கியவர்களில், ஆளுங்கட்சியினருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலும், பிற விவசாயிகளுக்கும், நில உடமையாளர்க்கும் பாரபட்சம் பார்த்து ரூ.20 லட்சம் வரை இழப்பீடு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு கொக்கராயன்பேட்டை முதல் ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை சாலை இணைக்கும் வகையில் ரிங் ரோடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக கடந்த 2007ம் ஆண்டு பல்வேறு விவசாய நிலங்களையும், வீடுகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. நிலத்தை வழங்கியவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு இடைக்கால நிவாரணமாக சிறிய தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி கட்ட இழப்பீடு தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் பகுதி, பகுதியாக பிரித்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பீடும், அதே பகுதியை சேர்ந்த பிற விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என பாரபட்சமாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) கவிதா தலைமையில் இழப்பீடு தொகை வழங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கடந்த 20ம் தேதி கலெக்டர் அலுவலகம் வந்தோம். ஆனால், டி.ஆர்.ஓ. கூட்டத்தில் பங்கேற்கமால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை வைத்து எங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கினர். இதில், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ரூ.1.07 கோடி, ரூ.1.62 கோடி, ரூ.1.05 கோடி என்ற மதிப்பீட்டில் இழப்பீடு தொகை வழங்கியுள்ளனர். ஆனால், அதே பகுதியை சேர்ந்த எங்களை போன்ற விவசாயிகளுக்கும், நில உடமைதாரர்களுக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மட்டுமே இழப்பீடு தொகை வழங்கியுள்ளனர்.

இறுதி கட்ட இழப்பீட்டில் பாரபட்சம் பார்த்து வழங்கியதுடன், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து கருத்து கேட்டால் அதிகாரிகள் எங்களை மூளை சலவை செய்து, கையெழுத்து போட்டு இப்போது வாங்கி கொண்டு, பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூடுதல் இழப்பீடு தொகை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். எனவே, இழப்பீடு தொகை வழங்கியதில் எவ்வித பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஒரே மதிப்பீட்டில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : party ,land ,Ring Road ,Erode ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...