×

மனநலம் பாதித்த நிலையில் சடலத்துடன் வசித்த மூதாட்டி: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: பூட்டிய வீட்டில், சடலத்தோடு கடந்த 5 நாட்களாக மனநலம் பாதித்த மூதாட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60). இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது கணவர், செங்கல்பட்டு சிறைத்துறையில் வேலை பார்த்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது, அவர் திருச்சியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனையடுத்து,   கணவரின் சிறைத்துறை வேலை இவருக்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு சிறைக்குப் பணியிட மாற்றம் வாங்கிய ராஜலட்சுமி(60) அங்கு வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் சிறைத்துறை பணியில் இருந்தபோது, சிறைக்கு அருகே ஓட்டல் நடத்தி வந்த தாமோதரன் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் இருவரும் செங்கல்பட்டு அடுத்த தென்னேரியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களாக ராஜலட்சுமியின் வீடு பூட்டியிருந்தது. மேலும், நேற்று முன்தினம் அந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கிராம மக்கள் சந்தேகமடைந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு  வந்த போலீசார், ராஜலட்சுமியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உயிரிழந்த நிலையில், தாமோதரன் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் அருகே ராஜலட்சுமி கவலை தோய்ந்த  முகத்துடன் உட்கார்ந்திருந்தார். பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக,  தாமோதரனின் சடலத்தை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது ராஜலட்சுமி சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் தடுத்தார். மேலும், ‘‘தாமோதரன் தூங்கிக் கொண்டிருக்கிறார்; அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.’’ என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து, ராஜலட்சுமியை சமாதானப்படுத்திய போலீசார், தாமோதரனின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாமோதரன் இறந்து போனதில் ராஜலட்சுமிக்கு மனநலம் பாதித்ததா? அல்லது அவரைக் கொலை செய்து விட்டு மனநிலை பாதிக்கப்பட்டதை போல் நடிக்கிறாரா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : state ,police investigation ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...