கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்; எலைட் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ70 ஆயிரம் சிக்கியது

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத ரூ70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் என பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் பணம், தங்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், ேநற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து டாஸ்மாக் கடையில் இருந்து கணக்கில் வராத ரூ69,180 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, அங்குள்ள அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆன்லைன் மூலம் நடந்த பண பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கிட்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>