×

நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற விவகாரம்: கொலையாளிக்கு துப்பாக்கி கொடுத்த மாஜி ராணுவ அதிகாரியிடம் விசாரணை

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், இங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து தலித் சந்த் மருமகள் ஜெயமாலாவின் சகோதரர் புனேவை சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), உத்தம் கமல் (28) ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, டெல்லி ஆக்ராவில் பதுங்கி இருந்த ஜெயமாலா (38), விலாஷ் (28), ராஜிவ் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும், இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பவருடையது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க நேரில் ஆஜராகும்படி யானை கவுனி போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி, அவர் ஆஜரானார். அப்போது, அவர் கூறியதாவது:
நான், ஜெய்ப்பூரில் ஓட்டல் நடத்தி வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக கைலாஷ் அடிக்கடி எனது ஓட்டலில் தங்கி செல்வார் என்பதால், அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன், விற்பனைக்காக வைத்திருந்த எனது கார் ஒன்றை, கைலாஷ் வாங்கினார். கார் டேஷ் போர்டில் உரிமம் பெற்ற எனது கைத்துப்பாக்கி இருந்தது. அதை மறந்து அப்படியே காரை கொடுத்துவிட்டேன். பின்னர், கைலாஷை தொடர்புகொண்டு, எனது துப்பாக்கியை ஒப்படைக்கும்படி கூறினேன். அடுத்த முறை ஓட்டலுக்கு வரும்போது தருகிறேன். என்றார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, என தெரிவித்துள்ளார். ராணுவ அதிகாரி கூறுவது உண்மையா என தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : army officer ,shooting death ,institution ,investigation ,president ,
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!