உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 450 பேர் கைது

திருச்சி, நவ.22: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 770 பேரை போலீசார் கைது செய்தனர். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக தேர்தல் பிரசாரத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவக்குவதற்காகவும் திருச்சியில் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் கடந்த 19ம் தேதி இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சத்திரம் அண்ணா சிலை அருகே திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாக்களில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை செல்வதற்காக கார் மூலம் சென்றபோது, துவாக்குடி அருகே போலீசார் மறித்து அவருடன் சென்ற கார்களுக்கு தடை விதித்தனர். அப்போது முதல் போலீசாருக்கும் கட்சியினருக்கிடையே வாக்குவாதம் துவங்கியது. தொடர்ந்து திருக்குவளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசிய உதயநிதிஸ்டாலினை அனுமதி இன்றி பேசியதாக கூறி அவரை கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சியினர் சாலைமறியல் நடத்தினர்.

தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டையில் படகில் சென்று மீனவர்களிடம் பேசியதாக கூறி 2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல் நடந்தது. இதில் திருச்சி மத்திய பஸ்நிலையம் பெரியார் சிலை அருகே மாநகர செயலாளர் அன்பழன் தலைமையில் நடந்த சாலைமறியலில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல் ரங்கம் ராஜகோபுரம் பகுதியில் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் நடந்த மறியலில் 80 பேர் கைது செய்யப்பட்டனர். துறையூர்: துறையூரில் நகர, ஒன்றிய திமுக சார்பில் 2 வது நாளாக துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி முக்கிய பிரமுகர்கள் 150க்கும் மேற்பட்டோரை துறையூர் போலீசார் கைது செய்தனர். லால்குடி: புள்ளம்பாடி ஒன்றிய திமுக சார்பில் மறியல் ஆர்பாட்டம் திருச்சி - அரியலூர் சாலையில புள்ளம்பாடி கத்தரி பள்ளத்தில் நடைபெற்றது. சவுந்தர பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நகர செயலாளர் முத்துக்குமார், புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் கோல்டன் ராஜேந்திரன், துணை சேர்மன் கனகராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர். லால்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் சேர்மனுமான ரவிசந்திரன், வடக்கு தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் துரை மாணிக்கம், துணை செயலாளர் குணசேகர் மற்றும் திமுக கட்சியினர் லால்குடி தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோரை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் கைது செய்தனர். கல்லக்குடி  நகரத்தில் வடக்கு ஒன்றிய  செயலாளர் செல்வராசா தலைமையில்  நகர செயலாளர் பால் துரை முன்னிலையில்  திருச்சி - அரியலூர் சாலையில் மறியல் போராட்டம்  நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோரை  போலீசார் கைது  செய்தனர். மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூரில், எதுமலை பிரிவு சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில்  50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் ஒன்றிய சேர்மன் தர், மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர் நீலமேகம், செந்தில் இளங்கோவன், நகர செயலாளர் சமயபுரம் துரை ராஜசேகர், மண்ணச்சநல்லூர் சிவசண்முககுமார்.

கவுண்டம்பட்டி சீவல்குமார் மண்ணச்சநல்லூர் ஒன்றிய பொருளாளர் பூனாம்பாளையம் குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். முசிறி: முசிறியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மறியல் செய்த திமுகவினர் 120 பேரும், தொட்டியத்தில் சாலை மறியல் செய்த திமுகவினர் 125 நபர்களும் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர் .சேகரன் தலைமையில் மறியல் செய்த திமுகவினர் 35 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: