ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி; கார்த்திக் எம்.எல்.ஏ. ஆய்வு

கோவை, நவ. 22: கோவை அவினாசி சாலை பீளமேடு ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 38 முறை திறந்து மூடப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், ரயில்வே கேட் அருகே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த உயர்மட்ட மேம்பாலம், கட்டுவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், 9 வருடங்களாகியும் 10 சதவீத பணிகள்தான் நடந்துள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மந்த கதியில் பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை. முதல்வரின் நேரடி பொறுப்பில் உள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை இனியும் தூங்கி வழியாமல், பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதுபோல், மாநகரில் பல இடங்களில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இல்லை. அடிக்கடி சாலைவிபத்து ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, ஹோப் காலேஜ் தண்ணீர்பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Stories: