×

மாவட்டத்தில் 856 வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  856 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல்  திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்த தங்களது பதிவுகளை, பொதுமக்கள் சரிபார்த்தனர். இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பழைய தர்மபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமை, கலெக்டர் கார்த்திகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது. 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 21ம்தேதி, 22ம்தேதி மற்றும் டிசம்பர் 12ம் தேதி மற்றும் 13ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கும் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க படிவம் 6-ல் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம்  (www.nvsp.in/Voter Help line mobile app) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் 24 மணிநேரம் செயல்படும் கட்டணமில்லா தொடர்பு எண் 1077 மற்றும் 1950 வாயிலாக, வாக்களர்கள் தங்களது புகார் தகவல்களை அறிந்து கொள்ளலாம்,’ என்றார். ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் (பொ) தணிகாசலம், தாசில்தார் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள் தெரசா, கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : camp ,district ,polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...