×

இரணியல் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் சிக்கினான் மீண்டும் திருட முயன்றதால் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி

திங்கள்சந்தை, நவ.22: குமரி  மாவட்டம் இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு, மல்லன்கோடு உள்ளிட்ட  பகுதிகளில் அடிக்கடி வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. திருட்டை  தடுக்கும் வகையில், அந்த பகுதி இளைஞர்களே கண்காணிப்பு குழு அமைத்து, இரவு  நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு ரோந்து பணியில் இருந்த போது  கடந்த மாதம் 18ம்தேதி, ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்ற வினு என்ற வாலிபரை  பிடித்து இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவன் மீது ஏற்கனவே  பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இரணியல் காவல் நிலையத்தில் இருந்த போது,  திடீரென வினு, தப்பி ஓடினான். அவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவில், தக்கலை அடுத்த திருவிதாங்கோடு அருகே ஒரு வீட்டில் வாலிபர்  நுழைந்தார். இதை கவனித்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி  வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் தக்கலை காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக  அந்த வாலிபர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அந்த வாலிபர் யார்? என்பது பற்றி  போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே  இரணியல் காவல் நிலையத்தில்  இருந்த தப்பி ஓடிய வினு என்பது தெரிய வந்தது. எனவே இரணியல் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். இரணியல் போலீசாரும் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரிக்கு சென்று, பிடிபட்டவர் வினு என்பதை உறுதி செய்தனர்.  பொதுமக்கள் தாக்கியதில், வினுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. வினு  தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். தப்பி ஓடியவர்  சிக்கியதால், போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர். உண்டியல் திருட்டு, வீடுகளின் வெளியே இருக்கும் பாத்திரங்கள் திருட்டு போன்ற ஏராளமான திருட்டு வழக்குகள் வினு மீது உள்ளன. வினு உடல்நலம் தேறியதும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags : robber ,police station ,Eraniyal ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து