சுரண்டையில் புரோட்டா மாஸ்டர் மெக்கானிக்கிற்கு கொரோனா தொற்று சுகாதார பணிகள் தீவிரம்

சுரண்டை, நவ. 22: சுரண்டையில் 45 நாட்களுக்கு பிறகு புரோட்டா மாஸ்டர், மெக்கானிக்கிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுரண்டை நகர பகுதியில் 290 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து தென்காசி மாவட்டத்தின் ஹாட் ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அனைத்து துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால், தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கடந்த 45 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருக்கன்குடிக்கு சென்று வந்த சுரண்டையை சேர்ந்த 44 வயதான மெக்கானிக் மற்றும் 26 வயதுடைய புரோட்டா மாஸ்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் சுரண்டை பேரூராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தாசில்தார் முருகு செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா ஆகியோர் கூறுகையில், சுரண்டையில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிவதுடன், தனி மனித இடைவெளியை கடைபிடித்து அடிக்கடி கைகளை கழுவி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சுரண்டை நகருக்குள் வரும் பொதுமக்களும் முக கவசம் அணிந்து வந்து பொருட்களை வாங்க வேண்டும். கடைகளை தினமும் கிருமிநாசினி கொண்டு தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும், என்றனர்.

Related Stories: