கடலூரை சேர்ந்தவர்களும் சிக்கினர் தொழிலதிபர்களிடம் பணம் பறிக்க மறைந்திருந்த 10 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் கைது கத்திகள், மிளகாய் பொடி பறிமுதல்

வில்லியனூர், நவ. 21: வில்லியனூர் அருகே தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 10 பேர் கும்பலை துப்பாக்கி முனையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி, வில்லியனூர், அகரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (50), காங்கிரஸ் பிரமுகரான இவரை கடந்த மாதம் ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றபோது, அவர்களிடமிருந்து உயிர் தப்பினார். இச்சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன் வில்லியனூர் அகரம் பகுதியில் மோட்டார் கொட்டகையில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு எஸ்பி ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல், எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, அக்கும்பலை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் பழனிவேல் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக எச்சரித்ததால். தப்பியோடாமல் அனைவவரும் சரணடைந்தனர்.

அனைவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகள், உருட்டுக்கட்டை, மிளகாய் தூள், பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் அனைவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து அதிரடியாக விசாரித்தனர். இதில் வில்லியனூர், உளவாய்க்கால் கவுதம் (20), அகரம் கவுதம் (19), கடலூர் பாக்கம் மெயின்ரோடு அரவிந்தன் (20), மணிபாலன் (23), விஸ்வா (21), திருவந்திபுரம் சூர்யா (23), சென்னை, பாடி, கலைவாணர் நகர் பாபு (19), கடலூர் உச்சிமேடு கேசவன் நகர் மதன் (28), கடலூர் வில்வா நகர், குடியிருப்பு பகுதி சரத்குமார் (25), கடலூர் மஞ்சக்குப்பம் வெங்கட் (23) என்பதும் தெரியவந்தது. அப்பகுதியில் தொழிலதிபர்கள் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க சதிதிட்டம் போட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.

இருப்பினும் இக்கும்பல் காங்கிரஸ் பிரமுகரான கணபதியை தீர்த்துக்கட்ட பதுங்கியிருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட 10 பேரும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆய்வு முடிவு வந்ததும் அனைவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இச்சம்பவம் வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கே போனது 4 வெடிகுண்டுகள்?கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, ரோந்து சென்ற வில்லியனூர் போலீசாரிடம் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில், ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. பின்னர்  இதில் தொடர்புடைய ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காங்கிரஸ் பிரமுகர் கணபதியை தீர்த்து கட்டும் மற்றொரு திட்டமும் இதில் இருப்பது தெரியவந்தது. மேலும் இதற்காக அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது.  ஆனால் கைது செய்யப்பட்ட 10 பேர் கொண்ட கும்பலிடமிருந்து மிளகாய்பொடி, கத்தி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுடுகாட்டில் மறைத்து வைத்து போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகள் என்ன ஆனது, என்பதே தெரியவில்லை. குற்றங்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்ட வேண்டிய போலீசார், வெடிகுண்டு பறிமுதல் செயப்பட்ட தகவல் வெளியானால், விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால், மிளகாய்பொடியோடு இந்த வழக்கை முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: