ஆத்தூர் பகுதியில் முதல்போக நெல் நடவு தீவிரம்

சின்னாளபட்டி, நவ. 21: ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது பருவமழை பெய்து வருவதால் வாய்க்கால்களில் நீர்வரத்து வர துவங்கியள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் முதல்போக நெல் நடவில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆத்தூரில் இருந்து சித்தையன்கோட்டை செல்லும் வழியில் உள்ள வயல்களில் நடக்கும் நெல் நடவு பணியால் பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் நெல் நடவிற்காக நாற்றுகளை பறிக்கும் பணியிலும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த விவசாயி நடராஜன் கூறுகையில், ‘இப்பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்வதால் நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதுடன், அரிசி நிறமும் வெண்மையாக இருக்கும். இதனால் இப்பகுதியில் விளையும் நெல்லுக்கு நல்ல கிராக்கி உள்ளது. தற்போது புதிய ஒட்டுரக ஐஆர்-51 நெல் ரகங்களை அதிகளவில் பயிரிட்டு வருகிறோம்’ என்றார்.

Related Stories: