×

டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு வேட்டவலத்தில் பரபரப்பு

வேட்டவலம், நவ.21: வேட்டவலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேட்டவலம் பேரூராட்சி, அண்ணா நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் டாஸ்மாக் கடையை அதே பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, கடைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேட்டவலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.இதையடுத்து, தாசில்தார் வைதேகி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜூ ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறினார். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : store ,anti-Tasmag ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...