அணைக்கட்டு காவல்நிலையத்தில் பணியாற்றியவர் கொரோனாவால் இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு 11.74 லட்சம் நிதியுதவி டிஐஜி வழங்கினார்

வேலூர், நவ.21: அணைக்கட்டு காவல்நிலையத்தில் பணியாற்றி, கொரோனாவால் பலியான சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ₹11.74 லட்சம் நிதியுதவியை டிஐஜி காமினி வழங்கினார்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் ெகாண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் முதல் போலீசார் வரை தங்கள் விருப்பத்தின் பேரில் நன்கொடையாக ₹11 லட்சத்து 74 ஆயிரத்து 50 பெறப்பட்டது.

நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி செல்வகுமார் முன்னிலையில் வேலூர் சரக டிஐஜி காமினி, சண்முகத்தின் மனைவி திலகவதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ₹11.74 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம், வேலூர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>