தகராறில் நண்பர் அடித்து கொலை

விருத்தாசலம், நவ. 20:   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சூர்யா (25), கூலி தொழிலாளி. தந்தை மற்றும் தாய் இறந்துவிட்ட நிலையில் தனது பாட்டி ஊரான விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கேகே நகரில் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் வினோத்குமார் (26) மற்றும் உறவினரான அன்பழகன் மகன் ராஜேந்திரன் (33) ஆகியோருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.  

 இந்நிலையில் கடந்த 17ம் தேதி அன்று வினோத்குமாரின் தாய் பாலாம்பிகையிடம், உனது மகன் எனது சித்திக்கு தீபாவளிக்காக புடவை மற்றும் பணம் கொடுத்துள்ளான். இதனால் எனது சித்தியின் குடும்பத்தில் பிரச்னை வருகிறது. என சூர்யா கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பாலாம்பிகை தனது மகன் வினோத்குமாரிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் சூர்யாவிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது சூர்யாவை வினோத்குமார் தலையில் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் தலையில் காயம் அடைந்த சூர்யா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

 உடனே சூர்யாவின் பாட்டி பஞ்சவர்ணம் மற்றும் உறவினர்கள் சூர்யாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வினோத்குமார், ராஜேந்திரன் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>