சொத்து தகராறில் மருமகளை குத்தி கொன்ற மாமனார், கொழுந்தனுக்கு இரட்டை ஆயுள் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம், நவ. 20: விழுப்புரம் அருகே சொத்து தகராறில் மருமகளை குத்தி கொலை செய்த மாமனார், கொழுந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவருக்கு முருகன் (38), சின்னதுரை (35) என 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். இதனிடையே, மூத்த மகன் முருகன், குடும்ப செலவுகளை ஏற்று, முன்னின்று நடத்தி வந்துள்ளாராம். மேலும், சகோதரிகளின் திருமணத்தையும் இவரே நடத்தியுள்ளாராம். இந்நிலையில், சுப்பிரமணிக்கு சொந்தமாக உள்ள 3 ஏக்கர் மற்றும் பம்பு செட் நிலம் பிரிப்பதில் சகோதரர் சின்னதுரையுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முருகன், ஏற்கனவே சம்பாதித்து தனது மனைவி தனலட்சுமி பெயரில் சொத்து வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த சொத்தில் பங்கு கிடையாது என்று சின்னதுரை, தந்தை சுப்பிரமணி, தாய் ராணி ஆகியோர் சேர்ந்து முருகனை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பின்னர் முருகன், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து பஞ்சாயத்து செய்து தன் பாகத்துக்கான நிலத்தை பெற்றுள்ளாராம். இதனால், முருகன் மீது மேலும் கோபம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி முருகன், தனக்கு பாகம் பிரித்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சின்னதுரை, பெற்றோர் சுப்பிரமணி, ராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முருகனை கத்தியால் குத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி அருகிலிருந்து ஓடி வந்து தடுத்துள்ளார். உடனே, தனலட்சுமியை பார்த்து நீதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று கூறி அவரையும் சரமாரியாக குத்தியுள்ளனர். தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே ராணி இறந்துவிட்டார். இதனிடையே, அனைத்து தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சின்னதுரை, சுப்பிரமணி ஆகியோருக்கு கொலை, கூட்டு சதி பிரிவில் இரட்டை ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி பிரிவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து, இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார்.

Related Stories:

>