திருமங்கலம் அருகே 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு

திருமங்கலம், நவ. 20:  ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி, சூரியபிரகாஷ் அடங்கிய குழு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி துணைக்கோள் நகரில் ஆய்வு மேற்கொண்டு, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல், விஜயநகர அரசு சின்னம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: உச்சப்பட்டி துணைக்கோள் நகர் அருகே 2 அடி உயரம் 1.5 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் ஒரு வீரன் புரவியில் அமர்ந்திருப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் வலது கையில் ஈட்டி ஏந்தி, இடது கையில் குதிரை கடிவாளத்தை பிடித்தபடி அமர்ந்துள்ளார். வீரன் கழுத்தில் சிறிய மாலை, தொடை வரை ஆடை அணிந்துள்ளார். சிற்பம் வடதிசை நோக்கி உள்ளது. போரில் பங்கேற்று வீரமரணமடைந்த குதிரைப்படை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். குதிரையில் அமர்ந்திருப்பதால் கிராம மக்கள், அவரை அய்யனராக வழிபடுகின்றனர். இதனருகே, கிழக்கு நோக்கியவாறு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்தகன்னியர் சிற்பங்களை மேடை அமைத்து வணங்குகின்றனர்.

இதன் கீழ்பகுதியில் தெற்கு நோக்கியுள்ள பலகைக்கல்லில் லிங்கம், சூரியன், சந்திரன், சூலம் ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இதனருகே பாறைமேல் 10 அடி உயரமுள்ள கல்லானான பீடத்துடன் கூடிய தீபத்தூண் அமைந்துள்ளது. இதை கிராம மக்கள் பெருமாள் கோயில் என்கின்றனர். பீடத்தில் 18ம் நூறாண்டைச் சேர்ந்த சேதமடைந்த கல்வெட்டு உள்ளது. இந்த தூணின் முன்புறம் உடைந்து போன பழைய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் விஜயநகர அரசின் சின்னமான வராகமும், மற்றொன்றில் வணங்கிய நிலையில் ஒருவரும், சங்கும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் விஜயநகர பேரரசு அமைந்த பின், இந்த ஊரில் பொதுமக்கள் அதிகமாக குடியேறியிருக்கலாம் என தெரிய வருகிறது. குதிரை வீரன், வராக சின்னம் ஆகியவற்றின் அமைப்பை கொண்டு இவை கி.பி 15ம் நூறாண்டை சேர்ந்ததாக கருதலாம்’ என்றனர்.

Related Stories: