வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் 21, 22ம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

கோவை, நவ. 20: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்பட பணிகளுக்காக நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கோவையில் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் வகையில் கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் வாக்காளப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 18 வயதை பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைப்பதற்கும், பெயர் நீக்கம், பதிவுகளில் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையிலும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்பட திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலமோ அல்லது செயலி மூலமாகவோ பெயர் மாற்றம், நீக்கம், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தவிர வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம், கோவை மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம்), பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில்  டிசம்பர் 15ம் தேதி வரையில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: