மு.க ஸ்டாலின் முதல்வராவது உறுதி திமுக தலைமையிலான கூட்டணியில் தொடருகிறோம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அபுபக்கர் எம்எல்ஏ பேட்டி

விழுப்புரம், நவ. 12: திமுக தலைமையிலான கூட்டணியில் தொடருகிறோம் என இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அபுபக்கர் எம்எல்ஏ கூறினார்.

விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி சார்பில் உத்தமநபியின் உதயதின விழா, அப்துல்காதிர் 50 ஆண்டுகால சமுதாய சேவைக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ஐக்கிய ஜமாத் மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல்ஹக்கீம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை குரைசானி பள்ளிவாசல் தலைமை இமாம் சதீத்துத்தீன் பாஜில்பாகவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான முகமது அபூபக்கர் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பேசினர்.

முன்னதாக, முகமது அபூபக்கர் எம்எல்ஏ கூறுகையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடர முடிவு செய்துள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் அதன் உரிமையை இழந்து கிடக்கிறது. மாநில சுய ஆட்சி என்பது கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயிகளுக்கு எதிராக புதிய சட்டங்கள், சிறுபான்மை, முஸ்லீம்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள், அரசு அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வு ஆட்சிமாற்றம்தான். தமிழகத்திலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, பாஜகவிடம் சரணடைந்து, உரிமைகளை இழந்து கிடக்கின்றது. வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக ஆட்சி மலரும், மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி. வரும் பிப்ரவரியில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்கிறார். நாங்கள் தேர்தல் பரப்புரையை மக்களிடத்தில் எடுத்துரைத்து வருகிறோம், என்றார். நிர்வாகி சுல்தான்மொய்தீன் உடன் இருந்தார்.

Related Stories: