ஆட்டையாம்பட்டி அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்

ஆட்டையாம்பட்டி, நவ.10: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள சீரகாபாடி கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவராகவன். இவருக்கு அம்மாசி(44) என்ற மனைவியும், மணிமேகலை (23), பூபாலன்(19) என்ற மகள், மகன் உள்ளனர். பூவராகவன் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அம்மாசியும், மணிமேகலையும் வீட்டில் இருந்தபோது, ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தவர் வீட்டில் பில்லி, சூனியம் உள்ளது. அதை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் குடும்பத்தில் கஷ்டம் நீடிக்கும் எனக் கூறியுள்ளான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மாசி, இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் பையில் வைத்திருந்த ஒரு எண்ணையை கொடுத்து தலை முதல் பாதம் வரை பூசிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அம்மாசி எண்ணையை வாங்கி தேய்த்துக் கொண்டார்.

தொடர்ந்து, அந்த நபர் அம்மாசி அணிந்திருந்த நகைகளை அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்து எடுத்து வருகிறேன் எனக்கூறி, 3 பவுன் செயின், கால் பவுன் தோடு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அந்த நபர் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த அம்மாசி அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால், அந்த நபர் அங்கு இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாசி ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் ஆட்டையாம்பட்டி எஸ்ஐ மரியதேவி செல்வம் மர்ம ஆசாமி குறித்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>