கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை

சேலம், நவ. 3: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த இடங்கணசாலை நா.பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் தனது மனைவி கமலா, மருமகள் கவிதா மற்றும் அவரின் 5 மாத குழந்தையுடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென, அனைவரும் தீக்குளிக்கும் நோக்கில், பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ெபட்ரோல் கேனை கைப்பற்றி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், கோவிந்தராஜிற்கு சொந்தமான 25 சென்ட் நிலம், அதே பகுதியில் உள்ள உள்ளது. இதை அவரது சகோதரர் முறை உறவினர் ஒருவர்  அபகரித்து கொண்டு, தனக்குதான் சொந்தம் என பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல், ஓமலூர் அடுத்த பழையூர் நல்லாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (60). இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குமரவேலுவுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ₹35 லட்சத்திற்கு விற்பதற்காக விலை பேசியுள்ளார். ஆனால் அவர் ₹2.40 லட்சம் கொடுத்துவிட்டு அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.  தற்போது, அந்த நிலத்தை மற்றொருவருக்கு கைமாற்றிய நிலையில், குமரவேல் அவர்களிடம் பணத்தை கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் அவர் குடும்பத்துடன் வந்து தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து, இரு குடும்பத்தினரையும், எஸ்பி அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>