செவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைக்கு போலீசார் பூட்டு வெடிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை

சேலம், நவ.3: சேலம் செவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைகளில் போலீசார் சோதனை நடத்தி, வெடிகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு பூட்டு போட்டனர். தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சேலம் மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பஜார் தெருவில் அனுமதியின்றி 3 பட்டாசு கடைகளில் வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையிலான போலீசார். அந்த கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அதில், லைசென்ஸ் பெறாமல் கடையை திறந்து பட்டாசு பாக்சுகளை விற்பனை செய்தது  தெரியவந்தது.

இதையடுத்து கடை உரிமையாளர்களான கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்த வினோத்குமார் (36), செவ்வாய்பேட்டை ஆண்டாள்தெருவை சேர்ந்த காமராஜ் (45), பஜார்தெருவை சேர்ந்த ஜெகதீசன் (51) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 150 பாக்ஸ் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தீபாவளி விற்பனைக்காக பட்டாசு கடைகளை அனுமதியின்றி திறந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறையாக அனுமதி பெற்றபின், உரிய விதிமுறைகளை பின்பற்றி கடையை நடத்திட வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>