திருச்சி மாநகராட்சியில் சைக்கிள், டூவீலர்களுக்கு தனி வழித்தடம் சேவையை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திருச்சி, நவ.1: திருச்சி மாநகரத்தில், மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சியின் மூலம் சாலையில் இடது ஓரமாக மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனத்திற்கான தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை தபால் நிலையத்திலிருந்து மாநகராட்சி அலுவலகம், எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, அண்ணாநகர் உழவர்சந்தை வரை சுமார் 3 கி.மீ., தொலைவில் இந்த பாதை அமைக்கப்பட்டள்ளது. மிதி வண்டி மற்றும் இருசக்கர வாகன தனி வழித்தடம் துவக்க விழா தலைமை தபால் நிலைய சந்திப்பு அருகே நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அமைச்சர்கள் சுற்றுலாத்துறை வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வளர்மதி ஆகியோர் மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘நகரங்களைத் திட்டமிடும் போது நடைபாதை மற்றும் மதிவண்டி ஓடுதள மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, இந்தியர்கள் உட்பட அனைத்து உலகளாவிய பெருநகரங்களும் விழித்திருக்கின்றன. சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பினை முதன்மையாக கருதி, அவர்கள் பயணத்திற்காக பிரத்யேக மிதிவண்டி தடம் அமைத்திட வழிவகை செய்யும் வகையில், திருச்சி மாநகராட்சி India Cycles 4 Change Challenge என்ற திட்டத்தில் பங்கு பெறுவது பாராட்டிற்குரியது. நம் நகரை சைக்கிள் பயணங்களுக்கு உகந்த நகரமாக மாற்ற முனைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் முயற்சி வெற்றி அடைய வேண்டும்’ என்றார். அமைச்சர் வளர்மதி பேசுகையில், ‘நம் நகரங்களில் சைக்கிள் பயணங்களை பாதுகாப்பானதாக ஆக்குவது மிக அவசியம். அதன் அடிப்படையிலேயே திருச்சி மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றார். மாநகராட்சி நகரப்பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் குமரேசன், ஆணையர்கள் கோ-அபிஷேகபுரம் வினோத், அரியமங்கலம் கமலகண்ணன், பொன்மலை தயாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: