கமிஷனர் அலுவலகத்தில் எழுத்து பிழையுடன் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் அதிரடி மாற்றம்

திருச்சி, நவ.1: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அதன்பின் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பரவ துவங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் மாதம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அதன்பின் பல்வேறு தளர்வுகளை அடுத்து தற்போது கொரோனா வைரஸ் அச்சமின்றி பொதுமக்கள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றனர். ஆனாலும் கொரோனா அச்சம் குறித்து அனைத்து வகையிலும் பொதுமக்களிடம் எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக தற்போது வரை பிளக்ஸ் பேனர், துண்டு பிரசுரம், மைக் மூலம் அறிவுறுத்தப்படுதல், மாராத்தான் ஆகியவை மூலம் கொரோனா குறித்த எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி மாநகர கமிஷனர் அலுவலக வாயிலில் காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் ஆகியோர் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலக வாயிலில் கைகளை சோப்பு மூலம் கழுவுவதற்கான தண்ணீருடன் கூடிய பேசன் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குறித்த படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கைகளை எப்படி கழுவ வேண்டும் என 9 படங்கள் கொண்ட விழிப்புணர்வு படத்தில் 7வதாக உள்ள படத்தில் கட்டவிரலை ‘கழற்றி’ இருகைகளையும் தேய்க்கவும் என எழுதப்பட்டிருந்தது குறித்து தினகரனில் நேற்று முன்தினம் செய்தி வெளி வந்தது. இதையடுத்து உடனடியாக ‘கழற்றி’ என்பதை ‘சுழற்றி’ என மாற்றி அமைக்க கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டதை அடுத்து மாற்றி பிளக்சில் அச்சிடப்பட்டது.

Related Stories: