×

வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்

புதுக்கோட்டை, நவ.1: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், ராப்பூசலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராப்பூசல் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாவட்டத்தில் இதுவரை 39 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் பயனாக விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடப்பு பருவத்தில் 1.10.2020 முதல் 30.10.2020 வரை விவசாயிகளிடமிருந்து 15,427 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,198 விவசாயிகளுக்கு ரூ.24.35 கோடி பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதுடன், இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக ரூ.700 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு வருகின்ற ஜனவரி மாதம் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திட்டம் நிறைவேற்றப்படும்பொழுது மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் நிரப்ப வழிவகை ஏற்படும். இதன் பயனாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : paddy procurement centers ,Associate Director of Agriculture ,
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...