×

இனிப்பு, கார வகைகளுக்கு காலாவதியான தேதி கட்டாயமாக குறிப்பிட வேண்டும் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

காரைக்கால், நவ.1: காரைக்காலில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இனிப்பு, கார வகைகளுக்கு கட்டாயம் காலாவதியான தேதி குறிப்பிடவேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்கால் மாவட்ட டீ, ஓட்டல், மளிகை உள்ளிட்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாகவும், இனிப்பு, கார வகைகளுக்கு காலாவதியான தேதியை யாரும் குறிப்பிடுவதில்லை என, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், 4 நாள் ஆய்வுப்பணி மேற்கொள்ள காரைக்கால் வந்தார். தொடர்ந்து, காரைக்கால் திருநள்ளாற்றில், போலீசார் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நிருபர்களிடம் கூறியது:
வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையும், டிசம்பர் 27ம் தேதி திருநள்ளாற்றில் சனி பெயர்ச்சி விழாவும் நடைபெறவுள்ளதால், காரைகாலில் 4 நாள் தீவிர ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். முக்கியமாக, ஓட்டல்களில் தரமாக உணவு சமைக்கப்படுகிறதா, சுத்தம், சுகாதாரம் உள்ளதா? கொரோனா சமூக இடைவெளி, போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்ற சமையல், பலகாரதுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய், இரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது. இது குறித்து, அனைவருக்கும் அறிவுறுத்தி வருகிறோம். எங்களது அடுத்தகட்ட ஆய்வில் அவை முறைப்படி கண்டுபிடிக்கப்படும். கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால், இனிப்பு, கார வகைகளுக்கு, உற்பத்தி தேதியைவிட, காலாவதியான தேதி கட்டாயம். சனிப்பெயர்ச்சி, தீபாவளி பண்டிகை முடியும்வரை இந்த ஆய்வு தொடரும். யாரேனும் இது குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், எனது 9894594332 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம். என்றார்.

Tags : Food Safety Officer ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...