×

ரேஷன் கடையில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூர், நவ. 1: கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ரூ. 45க்கு பெரிய வெங்காயம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறப்பங்காடிகள், சுயசேவை பிரிவுகள், பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ ரூ. 45 என்ற விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் கிலோ பெரிய வெங்காயம் வரப்பெற்றுள்ளது. இந்த வெங்காயங்கள் வையாபுரி நகர் (கடை எண் 1), வேலுச்சாமிபுரம் (கடை எண் 1), வெங்கமேடு(கடை எண் 2 மற்றும் 6), ராயனூர் (கடை எண் 1), மண்மங்கலம் (கடை எண் 1), உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி (கடை எண் 1), பள்ளப்பட்டி (கடை எண் 6 மற்றும் 10), கொளந்தானூர், புகளூர் (கடை எண் 1), அமிர்தபுரி, பாகநத்தம், பாலவிடுதி, வைகைநல்லூர், தரகம்பட்டி, ஆர்டிமலை, கிருஷ்ணராயபுரம் (கடை எண் 2), பஞ்சப்பட்டி, பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் செயல்பட்டு வரும் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 45க்கு விற்பனை செய்யப்படும். இதனை பொதுமக்கள் வாங்கி பயனடைய வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் உட்பட அனைத்து அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Vijayabaskar ,ration shop ,
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...