×

நீர்பனி பொழிவு அதிகரிப்பு

ஊட்டி,நவ.1: நீலகிரியில் நீர் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் பொதுவாக அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர்பனி விழத்துவங்கும். ஆனால், இம்முறை சற்று முன்னதாகவே நீர்பனி விழத்துவங்கியது. கடந்த 15 நட்களாக ஊட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதயில் நீர்பனி விழத்துவங்கியது. குறிப்பாக தலைகுந்தா, சாண்டிநல்லா, சூட்டிங் மட்டம், பைக்காரா, நடுவட்டம், கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் நீர்பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நீர் பனியின் தாக்கம் அதிகமாக இம்முறை காணப்படுவதால், உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால், தேயிலை மற்றும் மலை காய்கறிகள் செடிகள் பாதிக்கும் எனவும் தெரிவிக்கினறனர். கடந்த 4 மாதமாக நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்த நிலையில், தேயிலை மகசூல் மட்டுமின்றி மலை காய்கறிகளின் மகசூலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது நீர் பனி விழத் துவங்கியுள்ள நிலையில் தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீர் பனி விழத்துவங்கியுள்ளதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி விவசாய தோட்டங்களில் பணிக்கும் செல்லும் கூலித் தொழிலாளர்கள் குளிரால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

Tags :
× RELATED பனி கொட்டுவதால் விவசாயிகள் அச்சம்