×

பசுமைக்கு திரும்பியது முதுமலை புலிகள் காப்பகம்

ஊட்டி,நவ.1: முதுமலை பசுமையாக காட்சியளிப்பதால், யானை உட்பட வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இரு மாதங்கள் கொட்டித் தீர்க்கும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை இரு மாதங்கள் பெய்யும். இம்முறை ஜூன் மாதம் மழை துவங்கவில்லை என்ற போதிலும், அவ்வப்போது மழை பெய்தது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் சில நாட்கள் மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. இதனால், அனைத்து பகுதிகளும் பசுமையாக காட்சயளிக்கிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட தெப்பக்காடு, மசினகுடி, சீகூர், சிங்காரா பகுதிகளில் உள்ள வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளும், பறவைகளும் உள்ளன. இவைகள் வனங்கள் பசுமையாக காட்சியளித்தால், சாலையோரங்களில் மேய்ச்சலுக்காக வரும் அல்லது சாலையை கடந்துச் செல்லும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் தற்போது முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் காட்டு யானைகள் மற்றும் வினவிலங்குகள் சாலையோரங்களில் மேய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலை மற்றும் கூடலூர் - தெப்பக்காடு சாலையோரங்களில் காட்டு யானைகள் வலம் வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். எனினும், அவைகள் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவும், தொல்லை தரக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Green Mudumalai Tiger Reserve ,
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...